Pen Bird
Product details
தலைப்பைக் கண்டு திகைக்க வேண்டாம். புரியும்படியாக எதையும் எழுதிவிடக்கூடாது என்ற எனது வைராக்கியத்தை ஒட்டி இந்தத் தலைப்பைக் கொடுத்திருக்கிறேன்.
‘ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபவங்கள்’ என்பதைக் குறிப்பதுதான் ‘ஒசாமஅசா’ என்ற தலைப்பு.
இது என்னுடைய சுயசரிதை என்று யாரும் பயப்பட வேண்டாம்.
இது என்னுடைய சுயசரிதை அல்ல.
இந்தத் தொடர் என்னைப் பற்றியதல்ல - நான் சந்தித்த மற்ற மனிதர்களின் சிறப்புகளை, அபூர்வ குணங்களைப் பற்றியதுதான். அவர்களுடைய அணுகுமுறை, அவர்களுடைய குணாதிசயங்கள், செயல்முறைகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிற நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்டதுதான் என்கிற சமாதானத்தை ஏற்றுக்கொண்டு இந்தத் தொடரைப் பண்ணச் சம்மதித்தேன்.
இதில் எவ்வளோ விஷயங்களைச் சொன்னாலும், சில விஷயங்களை நிச்சயம் சொல்லமாட்டேன். பல சினிமாவுலகப் பிரமுகர்களும் சரி, அரசியல் பிரமுகர்களும் சரி, என்னிடம் பேசும்போது மனம்விட்டுப் பேசியிருக்கிறார்கள். அதில் சில விஷயங்கள் வெளியில் சொல்லக்கூடாத விஷயங்களாக இருக்கும். அப்படிப்பட்டவற்றை நான் இந்தத் தொடரில் சொல்ல மாட்டேன். அதெல்லாம் என்னுடனேயே போய்ச் சேர வேண்டியதுதான்.
இதில்கூட நான் சந்தித்த எல்லோரைப் பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் சொல்லிவிடப் போவதில்லை. நிறையப் பேர் இதில் விடுபட்டுப் போகலாம்.
ஏனென்றால், நான் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அதற்கு முடிவே இருக்காது. அதனால் சிலரைப் பற்றிச் சொல்ல விட்டுப் போனால் அதற்காக அவர்கள் வருத்தப்படக் கூடாது. சொல்லாத வரைக்கும் நமக்கு நல்லது என்று அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்.
அதே மாதிரி, என்னால் இந்தத் தொடரில் குறிப்பிடப்படுகிறவர்கள், குறிப்பாக அவர்களில் இன்றும் இருப்பவர்கள், ‘நம்மை ஏன் இவன் வம்புக்கு இழுக்கிறான்?’ என்று நினைக்கக்கூடாது. ரொம்பவும் வம்புக்கு இழுக்க மாட்டேன். சுமாராகத்தான் வம்புக்கு இழுப்பேன்.
மீண்டும் சொல்கிறேன்.
இது சுயசரிதை அல்ல. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்!
Similar products