ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும், இப்போது அதற்கான மவுசே தனி தான். ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள். வெறும் ருசி மட்டும் தானா என்றால், அது தான் இல்லை. இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம். சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. எந்தவித பாதுகாப்பும் இன்றி, சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும். அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.