
Pen Bird
Product details
'ஏர்த்தொழில்' குறித்து எழுந்த முதல் நூல், கம்பர் எழுதிய 'ஏர் எழுபது' ஆகும். இந்நூலுக்கு முன் 'ஏர்த்தொழில்' பற்றிய நூல் இல்லை.
மன்னன், மக்கள், கலை, பண்பாடு போன்றவை உழவுத்தொழிலைச் சார்ந்துள்ளன: ஏர் இல்லையெனில் போரில்லை; உழவரின் நாற்றுமுடியே மன்னரின் மணிமுடி; போரில் வெற்றி தோல்விகள் உண்டு, உழவரின் களத்தில் தோல்வி என்பதே கிடையாது; சிவனது கழுத்துக் கறையினும், எருத்தின் கழுத்துத் தழும்பே பெருஞ்சிறப்புடையது; ஞாயிறு, திங்களின் கதிர்கள் உயிர்களை வளர்ப்பதில்லை. ஆனால், நெற்கதிர்களோ உயிரை வளர்க்கின்றன, உணவால் பசி ஒழிந்தால் மொழி, அறிவு வளரும்; நாடு சிறப்பெய்தும் போன்ற கருத்துக்கள் 'ஏர் எழுபதில்' உள்ளன.
அதேபோல், ஏர்த்தொழிலில் ஏற்படும் பொறுப்பை வேறு எந்தத் தொழிலாலும் வழங்கிவிட முடியாது. 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்ற கருத்தை மனத்தில் எழவே விடாத ஒரே தொழில் ஏர்த்தொழில் மட்டுமே.
'மேல்காற்று வீசி மழைமேகம் கலைந்துபோனாலும், கடலே வற்றும் அளவிற்கு மழை பெய்யவில்லை என்றாலும், வெள்ளி என்னும் விண்மீன் தெற்குத் திசையில் சென்றாலும், கிணற்று நீரை ஏற்றத்தால் இறைத்து, நீரை வயலுக்குப் பாய்ச்சுவதைத் தங்கள் கடமையாக உணர்ந்து வேளாளர்கள் நீர் இறைப்பார்கள்.'
அப்படி நீர் இறைக்கவில்லை என்றால் இங்கே பல உயிர்கள் பஞ்சத்தில் சாக நேரிடும் என்பதை விளக்கிக் கூறவேண்டிய தேவையில்லை.
'உணவு' என்னும் மூன்றெழுத்துக்குப் பின் 'உழவு' என்னும் பெருந்தொழில் மறைந்திருக்கிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது இந்நூல்.
இந்நூலைப் பதம் பிரித்து வழங்கியதுடன் எளிய தெளிவுரையையும் எழுத்தாளர் வழங்கியுள்ளார்.
Similar products